Header Ads


ஸ்விங், பவுன்ஸ்: புஜாரா நீங்கலாக இந்திய அணி தடுமாற்றம்

கொல்கத்தாவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.
2-ம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, புஜாரா 47 ரன்களுடனும் சஹா 6 ரன்களுடனும் களதில் இருக்கின்றனர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் 11 ஓவர்கள் வீசி 9 மெய்டன்களுடன் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்..
மொத்தம் 2 நாட்களில் 32.5 ஓவர்களே வீச முடிந்தது. மேகமூட்டமான வானிலையில் பிட்சில் கொஞ்சம் ஈரப்பதத்துடன் புற்களினாலும் பந்துகள் ஸ்விங் ஆனதோடு பவுன்ஸும் ஆனது, இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இத்தகைய ஒரு பிட்சில் ஆடிப் பழக்கமற்றவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
இத்தகையப் பிட்ச்களில் கே.எல்.ராகுலை விடவும் முரளி விஜய்தான் சிறந்த தெரிவாக இருக்க முடியும். அவருக்கு தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும் என்பதோடு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் நெருக்கமான பந்துகளைக் கூட ஆடாமல் விடக்கூடிய பொறுமையும், திறமையும் கொஞ்சம் கூடுதல்.
ஆனால் ராகுல் கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ஆடக் களமிறங்கும் போது முதல் பந்தே இத்தகைய ஒரு அபாரப் பந்தை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஆப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி சற்றே லேட்டாக அவுட் ஸ்விங் ஆகியது, இது ராகுலின் நிலையையே மாற்றியது. பந்தில் பவுன்சும் கூடுதலாக இருந்ததால் எட்ஜ் ஆகி டிக்வெலாவிடம் கேட்ச் ஆனது.
ஷிகர் தவண் தன்னிடம் இத்தகைய பிட்ச்களில் காட்ட வேண்டிய ஆக்ரோஷமான ஷாட்களுக்கான தயாரிப்புகள் இல்லாமல், லக்மல் வீசிய பந்தின் பிட்சுக்குச் செல்லாமல், காலை நகர்த்தாமல் ஆஃப் திசையில் ஷாட் ஆட நினைத்தார், மட்டையும் நேராக இறங்கவில்லை இதனால் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இது அவசரகோல ஷாட் என்றே கூற வேண்டும்.
விராட் கோலி 11 பந்துகளைச் சந்தித்தார் அவரது பொறுமையையும் உத்தியையும் சோதிக்கும் பந்துகளுக்குப் பிறகு ஒரு பந்தை லக்மல் உள்ளே கொண்டு வந்தார். இதை எதிர்பாராத கோலியின் கால்காப்பைப் பந்து தாக்க எல்.பி. முறையீட்டுக்கு நீஜல் லாங் அவுட் கொடுத்தார், கோலி ரிவியூ செய்தார், ஆனால் நடுவர் தீர்ப்பே வென்றது. கோலி ஒரு டக் அவுட் ஆனார்.
ரஹானே இன்று காலை 4 ரன்களில் வெளியேறினார். 21 பந்துகளைச் சந்தித்த அவர் சுரங்க லக்மலின் அருமையான லைன் மற்றும் லெந்த்தில் மட்டை, பந்துக்காக ஏங்கியது, இந்நிலையில் சற்றே தளர்வாக வீசிய ஷனகாவின் பந்தை அடிக்கலாம் என்று ரஹானே தவறாக முடிவெடுத்தார், தவறான பந்தை தேர்ந்தெடுத்தார், ஆடாமல் விட வேண்டிய ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே சென்ற பந்தை கவர் டிரைவ் ஆட நினைத்து பிடிபட்டார். ஆடக்கூடாத ஷாட் என்பதை விட ஷனகாவின் 125கிமீ ஜெண்டில் மீடிய பேஸ் பந்தில் விக்கெட் கொடுத்தது ரஹானேயின் தன்னம்பிக்கையை நிச்சயம் காலி செய்திருக்கும்.
அஸ்வின் இறங்கி ஷனகாவின் புல்டாஸை கவர் திசையில் பவுண்டரி அடித்தார், ஆனால் அதன் பிறகு அவருக்கும் சிக்கல். காலையும் நகர்த்தவில்லை, ஷனகாவின் பந்தை இவரும் கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆட்டம் சரியாக மதியம் 2.30 மணிக்கு மேலும் தொடர முடியாது என்று நிறுத்தப்பட்டது. புஜாரா மட்டுமே மிகச்சரியாக ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்கு உள்ள தகுதி, திறமை, பொறுமை, உத்தி ஆகியவற்றைக் கடைபிடித்து கடினமான பிட்சில் ஆடினார். அவர் 9 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
இத்தகைய பிட்ச்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் போட்டு, அதில் சர்வதேச இந்திய வீரர்களை ஆட வைக்க வேண்டும் வருடம் 365 நாட்களில் 80% மட்டைப் பிட்ச்களில் உள்நாட்டில் ஆடிக்கொண்டிருந்தால் நிச்சயம் இத்தகைய சவால்கள் இந்திய அணி நம்பர் 1 அணியாக இருந்தாலும் சர்வதேச தரத்தில் பின்னடையவே செய்யும்.
Powered by Blogger.