Header Ads


இலங்கையில் தமிழினம் மறைந்துவிடும் அபாயம்; எச்சரிக்கிறார் வடக்கு முதலமைச்சர்தாயகம், சுயநிர்ணயம், வட, கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற கருத்துக்கள் கொழும்பிலும் தெற்கிலும் வாழும்போது தேவையற்றதாக கருதப்படுகின்ற போதிலும், வட, கிழக்கிற்கு இவை மிக முக்கியமெனவும் வடக்கு, கிழக்கு மக்கள் இவற்றின் தேவையை, தாற்பரியத்தை, தத்துவத்தை முழுமையாக அறிந்துள்ளனர் என்று வட, மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழுத்தி உரைத்திருக்கிறார்.
இந்த வாரத்திற்கான கேள்வியாக, "தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் படாதபாடுபடுகையில் அண்மையில் அரசியலுக்கு வந்த நீங்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதை பலரும் விமர்சனம் செய்கின்றனர். சேர்ந்து போகாமல் முரண்படுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்;
தனக்கு பெயர், புகழ், அந்தஸ்து, பணம், கல்வி எல்லாம் கிடைத்துவிட்டதாகவும் இப்போது எதிரிகள் உட்பட சகலர் மீதும் அன்பு பாராட்டக்கூடிய மனநிலையை இறைவன் தனக்கு தந்திருப்பதாக குறிப்பிட்டதுடன் முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், சுமந்திரன் எம்.பி., சட்டத்தரணி புவிதரன் போன்றோர் தனது மாணவர்கள் என்பதில் தான் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பதாகவும் அவர்களை அன்புடன் நோக்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்ளாவிடில் இலங்கையிலிருந்து தமிழ் இனம் மறைந்துவிடுமென்ற எண்ணம் மேலோங்கியிருப்பதால் தனக்கு சரியெனத் தென்படுவதை கூறிவருவதாகவும் ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இக்கட்டினுள் இட்டுச் செல்லும் எண்ணம் இம்மியளவும் தனக்கு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, பணம், பதவி, அதிகாரம், சொகுசுவாழ்க்கை, இவைதான் முக்கியமென நினைக்கும் சிலர், அரசாங்கம் தருவதை எடுத்து சந்தோசமாக இருப்பதை விடுத்து வீணாக "சமஷ்டி', "அது இது' என்று கூறிக்கொண்டு தமது நடவடிக்கைகளுக்கு தான் முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறுவதாக "அவ்வாறு கூறுவோரை' சாடியள்ளார்.

வட, கிழக்கு இணைப்பு ஏன் அவசியம் என்பது பற்றி விபரித்திருக்கும் அவர், அதேவேளை "சமஷ்டி' ஒன்றே ஓரளவுக்கேனும் பெரும்பான்மையினத்தின் பேரினவாதத்தை முறியடிக்கக்கூடியது என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இனப் பிரச்சினை தீர்வுக்கு வரலாறு அவசியமெனக் கூறியுள்ள அவர் "அரசியல் நோயை'பூரணமாக குணப்படுத்த வரலாற்று விபரங்களும் டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனை விபரங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டால் சிங்கள மக்களின் தலைவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்
Powered by Blogger.